செவ்வாய், 28 மே, 2019

2019 தேர்தலை பற்றி நமது பொதுச்செயலர் கருத்து ...
மூன்று லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க.வேட்பாளர் பிரக்யா தாக்கூர் மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகரம் போபால் நாடாளுமன்ற தொகுதியில் அமோக வெற்றிப் பெற்றுள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான திக் விஜய் சிங் அவர்களை தோற்கடித்தார். திக் விஜய் சிங் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர். அவரை தோற்கடித்துள்ள பிரக்யா தாக்கூர் ஒரு இந்து பெண் சாமியார். தீவிரவாத செயலுக்காக சிறையில் இருந்த குற்றவாளி. தற்பொழுது தேர்தலில் போட்டியிட பினையில் வெளிவந்துள்ளார். இவர் கடந்த வாரம் காந்தியடிகளை சுட்டுக் கொன்ற கொலைகாரன் கோட்சேவை தேசபக்தி மிகுந்தவர் என்று புகழ்ந்து பேசினார். நாடெங்கும் இதற்கு எதிர்ப்புக் குரல் எழுந்தது.
எதற்காக இந்த ஒரு தேர்தல் முடிவைப் பற்றி இவ்வளவு விரிவாக எழுதுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். அதற்கு காரணம் உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் மொத்தமுள்ள 29 தொகுதிகளில் 28 ல் பா.ஜ.க. வெற்றிப் பெறுகிறது. இத்தனைக்கும் இந்த மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்புதான் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. அதில் காங்கிரஸ் கட்சி வெற்றிப் பெற்று 15 ஆண்டு கால பா.ஜ.க.ஆட்சியை அரசு அதிகாரத்தில் இருந்து அகற்றியது. ஆனால் இப்போது மீண்டும் பா.ஜ.க. அங்கு மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. அநேகமாக அங்கு விரைவில் ஆட்சிக் கவிழ்ப்பு/ கலைப்பு நிகழக் கூடும். அதாவது ஹிந்தி பெல்ட் எனப்படும் குஜராத்/ ராஜஸ்தான்/ உத்திரப்பிரதேசம்/ மத்தியப்பிரதேசம் /பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க.வை பலவீனப் படுத்தாமல் அக்கட்சியை தேசிய அதிகாரத்தில் இருந்து அகற்றுவது சுலபமல்ல என்பதை வலியுறுத்தும் நோக்கத்துடன் தான் இதை குறிப்பிட்டுள்ளேன். அது நெடுங்காலமாக பரப்பியுள்ள இந்துமதவெறி - முஸ்லிம் எதிர்ப்பு உணர்வு இவற்றை லாவகமாக கையாள அதற்கு ஆர்.எஸ்.எஸ்.பேருதவி புரிகிறது. இந்த அம்சங்களை உள்வாங்காமல் எவ்வளவு முயற்சித்தாலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஒருபோதும் வெற்றியை நெருங்க இயலாது. இந்த தேர்தலில் மோடியின் தந்திரங்கள் வென்றுள்ளன.அவரது மந்திரம் என்று எதுவுமில்லை. ஏனெனில் அவரது மந்திரம் இந்த தேர்தலிலும் பஞ்சாப்/ கேரளம்/ தமிழ்நாடு/ ஆந்திரம்/ மேற்கு வங்காளம்/ தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பலிக்கவில்லை- பலனளிக்கவில்லை.
குறிப்பாக அண்டை மாநிலமான கேரளாவில் சபரிமலை அய்யப்பன் கோயிலில் பெண்கள் நுழைவு குறித்த சர்ச்சையை பா.ஜ.க.பயன்படுத்தி அரசியல் ஆதாயம் பெற பகீரத முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அதில் பா.ஜ.க. படுதோல்வியை தழுவியது. தமிழ்நாட்டில் தந்தை பெரியார் உள்ளிட்டவர்களின் பெரும் உழைப்பு பா.ஜ.க. வுக்கு மீண்டும் படுதோல்வியை பரிசளித்துள்ளது. அதேபோல எல்லையோர மாநிலமான பஞ்சாபில் சீக்கிய மக்கள் பெரும் எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள். அங்கும் பா.ஜ.க.வினால் வெற்றிப் பெற இயலவில்லை.இதற்கான காரணங்களை பா.ஜ.க.வை வீழ்த்த நினைப்போர் நிச்சயமாக ஆராயவேண்டும்.
இத்தேர்தலில் ஆளுங்கட்சி நடத்திய பல விதமான முறைகேடுகள்- விதிமீறல்கள் தேர்தல் ஆணையத்தால் கண்டுகொள்ளப்படவில்லை.அதிகாரபலம்- பணபலம்- ஊடகங்கள் அரசின் ஊதுகுழலாகவே மாறிய நிலை போன்ற பல்வேறு அம்சங்கள் பா.ஜ.க.வுக்கு சாதகமானதாக அமைந்துவிட்டதை மறுக்க இயலாது. மொத்தத்தில் இந்த தேர்தல் முடிவுகளை மிகவும் கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். மக்களிடையே உண்மையான பிரச்சனைகளை அதற்கான காரணிகளை இடைவிடாமல் பிரச்சாரம் செய்வதன் மூலமாகவே எதிர்காலத்தில் நாம் விரும்பும் மாற்றங்களை அரசியலில் கொண்டு வரமுடியும்.
Image may contain: 3 people, including Subbarayan Lakshman, people smiling, people standing

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக