செவ்வாய், 8 ஜூலை, 2014

பாலன் இல்லத் திறப்பு விழா

              இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தை திங்கள்கிழமை திறந்து வைத்த அக்கட்சியின் அகில இந்திய செயலாளர் டி.ராஜா. உடன், பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்.
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு தலைமை அலுவலகமான 
      பாலன் இல்லத்தை திங்கள்கிழமை திறந்து வைத்த அக்கட்சியின் அகில இந்திய 
   செயலாளர் டி.ராஜா. உடன், பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் 
    ஆர்.நல்லகண்ணு, தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்.


மதவாத சக்திகளின் எழுச்சியால் நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் எஸ். சுதாகர் ரெட்டி எச்சரித்தார்.
சென்னை தியாகராய நகர் செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் ரூ. 15 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகமான பாலன் இல்லத்தை திங்கள்கிழமை திறந்து வைத்து அவர் பேசியது:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு அலுவலகமான இந்த பிரமாண்டமான கட்டடத்தை திறந்து வைக்கும் இந்த நேரத்தில், கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்காக வித்திட்ட முன்னோர்களை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
ஆந்திரத்தையும் உள்ளடக்கிய சென்னை மாகாணத்தின் தலைநகரமாக இருந்த சென்னை மாநகரம், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர்களுக்கும் மையமாக திகழ்ந்தது. இங்குதான் முதன் முதலில் சிங்காரவேலர் தொழிற்சங்க இயக்கத்தை தொடங்கினார். ஜீவா, ராமமூர்த்தி, கல்யாணசுந்தரம், உமாநாத், மணலி கந்தசாமி, பாலதண்டாயுதம், சீனிவாச ராவ், மாணிக்கம் என போர்க்குணம் மிக்க கம்யூனிஸ்ட் முன்னோடிகளின் உழைப்பை இந்த நேரத்தில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
நடந்து முடிந்த தேர்தலில் வலதுசாரி சக்திகள் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளன. மதவாத சக்திகளின் எழுச்சியால் நாட்டுக்கு மிகப்பெரிய அபாயம் ஏற்பட்டுள்ளது. சிந்தனைக்கு பூட்டு போடக் கூடியவர்கள் ஆட்சியில் அமர்ந்துள்ளனர்.
சமூக சீர்திருத்தங்களுக்காக போராடிய பெரியார் தோன்றிய மண் இது. பெரியாரின் கருத்துகள் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இப்படிப்பட்ட தமிழகத்திலும் சமீப காலமாக தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடப்பது, நாம் செய்ய வேண்டிய பணிகள் அதிகம் இருப்பதைக் காட்டுகிறது.

இந்தியா மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்ட நாடு. பெரும்பான்மையினரால் சிறுபான்மையினருக்கு எந்த ஆபத்தும் நேர்ந்துவிடக் கூடாது என்பதை விரும்புவர்கள் அதிகமாக வாழும் நாடு.
எனவே, இந்தியாவை வெறும் எம்.பி.க்களின் எண்ணிக்கையை வைத்துக் கொண்டு மட்டும் வழிநடத்தி விடமுடியாது. பொதுக்கருத்தின் அடிப்படையில் மட்டுமே நாட்டை வழிநடத்த முடியும். தலித் மற்றும் சிறுபான்மை மக்களை பொருளாதார, சமூக, அரசியல் ரீதியாக காப்பதற்கான இயக்கங்களை நடத்த வேண்டிய கடமை தற்போது கம்யூனிஸ்ட்டுகளின் முன் உள்ளது என்றார் சுதாகர் ரெட்டி.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், தேசியச் செயலாளர் டி. ராஜா, மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, மாநில துணைச் செயலாளர் சி. மகேந்திரன், ஆந்திர மாநிலச் செயலாளர் கே. நாராயணா, புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஆர். விஸ்வநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் அ. சௌந்தரராஜன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
பாஜக, திமுக தலைவர்கள் நேரில் வாழ்த்து

அரை ஏக்கர் பரப்பளவில் ரூ. 15 கோடியில் 6 மாடிகளைக் கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு அலுவலகமான பாலன் இல்ல திறப்பு விழாவில் பாஜக தேசியச் செயலாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான உ. பலராமன், இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தர் உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.பாலன் இல்லம் அமைந்துள்ள இடத்தை மிகக்குறைந்த விலைக்கு வழங்கிய அமலா சங்கருக்கு நினைவுப் பரிசாக நடராஜர் சிலை வழங்கப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி, மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் அனுப்பிய வாழ்த்துச் செய்தி விழாவில் வாசிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான இந்திய கம்யூனிஸ்ட் தொண்டர்கள் விழாவில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக