சனி, 5 ஜூலை, 2014

பாலன் இல்லம்:உழைக்கும் வர்க்கத்தின் பாசறை
தமிழக வரலாற்றில் ‘பாலன் இல்லம்’ முக்கியத்துவம் வாய்ந்தது. அதைப் புதுப்பித்து திறப்பு​விழாவுக்கு நாள் குறித்திருக்கிறார்கள். முழுமூச்சுடன் அதற்கான பணிகளில் மூழ்கியிருக்கும் தோழர் தா.பாண்டியனைச் சந்தித்தோம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில், ‘பாலன் இல்லம்’ வகிக்கும் பங்கை விவரித்தார் தா.பாண்டியன். 
”1933-ல் எஸ்.வி.காட்கே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ஆரம்பித்தார். ஜார்ஜ் டவுன், டேவிட்சன் தெரு, ஜோன்ஸ் தெரு, பெரியண்ண மேஸ்திரி தெரு என்று மாறி மாறி வாடகைக் கட்டடத்திலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில அலுவலகம் செயல்பட்டு வந்தது.
தோழர்கள் எம்.ஆர்.வெங்கட்ராமன், பி.ராம​மூர்த்தி, பாலதண்டாயுதம், சீனிவாசராவ், கல்யாண​சுந்தரம், மணலி கந்தசாமி, ஏ.எஸ்.கே போன்றோர் காலத்தில்கூட சொந்தக் கட்டடம் சாத்தியம் ஆகவில்லை. 1970-ம் ஆண்டு கட்சியின் மாநிலச் செயலாளராக எம்.கல்யாணசுந்தரம் இருந்த போதுதான் சொந்தக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அந்த முயற்சி முன்மொழியப்பட்ட பொதுக் குழுவில் பாலதண்டாயுதம், கே.டி.ராஜு, கே.டி.கே.தங்கமணி, காத்தமுத்து ஆகியோருடன் நானும் இருந்தேன். ஆனால், நாங்கள் எதிர்பார்த்த விலையில் நாங்கள் எதிர்பார்த்த பகுதிகளில் சென்னையில் அப்போது எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை. மேற்கு வங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ரேணு சக்கரவர்த்தி மூலம், சென்னை தி.நகரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டுக்கு அருகில் ஓர் இடம்  இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அந்த இடம் உலகப் புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர்கள் உதய சங்கர், அமலா சங்கர் தம்பதியினருக்குச் சொந்தமானது.
நடனப் பயிற்சிக்கான கலாசாலையை அங்கு நடத்தி வந்தனர். திடீரென்று உதய சங்கர் நோய்வாய்பட்டதால், அவர் அந்த இடத்தை விற்றுவிட்டு கொல்கத்தா போக முடிவெடுத்தார். இந்தத் தகவல் அறிந்த பெரிய பணக்காரர்கள் எந்த விலையும் கொடுத்தும் அதை வாங்கத் தயாராக இருந்தனர். சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கர், இயக்குநர் சத்யஜித் ரே, உதய சங்கர் எல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்கள். எனவே, அவர்கள் இந்த இடத்தை எங்களுக்கே கொடுத்தனர். ‘உங்களால் முடிந்ததைக் கொடுங்கள்’ என்று சொல்லிவிட்டனர். அரசு மதிப்பீட்டுத் தொகையைக் கணக்குப் போட்டு, அப்போதைய மதிப்புக்கு நான்கரை லட்சம் கொடுத்தோம். 
அந்தத் தொகையை வசூலிக்க தோழர்கள் பாலதண்டாயுதம், கல்யாணசுந்தரம்  ஆகியோருடன் தமிழகம் முழுவதும் நானும் சுற்றினேன். அப்படித்தான் இந்த 49  சென்ட் நிலத்தை வாங்கினோம். அதில் நடனப் பயிற்சிக்காக அவர்கள் அமைத்திருந்த ஓர் அரங்கம் இருந்தது. ஒரு சிறிய வீடும் இருந்தது. மீதி இடம் அத்தனையும் பொட்டலாகக் கிடந்தது.
அப்போது (1973-ம் ஆண்டு) நாடாளு மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த பாலதண்டாயுதமும் மோகன் குமாரமங்கலமும் ஜப்பானுக்குச் செல்லும் வழியில் விமான விபத்தில் காலமானார்கள். அதனால், இந்த அலுவலகத்துக்கு தோழர் பாலதண்டாயுதம் நினைவாக ‘பாலன் இல்லம்’ என்று பெயர் வைத்தோம்.
சென்னையில் ஒவ்வொரு சதுர அடிக்கும் வரி கட்ட வேண்டும் என்ற விதி​முறை இருந்ததால், ‘எதற்கு பொட்டல் நிலத்துக்கு வீணாக வரி கட்ட வேண்டும்? அங்கு கட்டடத்தைக் கட்டிவிடலாம்’ என்று ஒரு துணிச்சலான முடிவை நான் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆனதும் மாநிலக் குழுவில் சொன்னேன். அதை மாநிலக் குழு ஏற்றுக்கொண்டது.
நகர்ப்புற வளர்ச்சிக் குழுமம், புதிய திருத்தத்தின்படி ஆறு மாடிகள் கட்ட அனுமதி கொடுத்தது. அதன் பிறகு, கார்னர் ஸ்டோன் ஆண்டன் ஜோ என்ற இன்ஜினீயரிடம் ஆலோசனை கேட்டோம். அவர், ‘பதினாலரை கோடி ரூபாய் செலவாகும்’ என்றார்.
கட்சித் தோழர்களிம் நிதி வசூல் செய்​தோம். அதில் கிடைத்த தொகை சில லட்சங்களைத் தொட்டதே தவிர ஒரு கோடியைக்கூட எட்ட வில்லை. வங்கியில் கடன் கேட்டால், அரசியல் கட்சிகளுக்கு கடன் தர முடியாது என்றனர். பழைய  கட்டடத்தை வேறு இடித்தாகிவிட்டது. என்ன செய்வது என்று புரியாத நிலையில் வங்கிகளுடனே தொடர்ந்து போராட முடிவெடுத்தோம். அதன்பின் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, ஜனசக்தி பத்திரிகையின் பெயரில் 12 கோடி மட்டும்தான் தர முடியும் என்று சொன்னார்கள்.
இப்போது பாலன் இல்லம் பிரமாண்டமாக எழுந்து நிற்கிறது.  
ஆறாவது தளத்தில் எங்களின் கட்சி அலுவலகத்தை வைத்துக்கொண்டு, மற்ற  தளங்களை வாடகைக்கு விட முடிவு செய்துள்ளோம். இந்தக் கட்டடத்துக்குள் எந்த இடத்திலும் தூண்கள் கிடையாது. 73 தூண்கள் பூமிக்கடியில்தான் அமைக்கப்பட்டுள்ளன. கட்டடம் பிரமாண்டமானதாக இருக்கலாம். ஆனால் கம்யூனிஸ்ட்கட்சிக்கு உரிய இயல்பு மாறாமல் இது இயங்கும்” என்றார் தா.பாண்டியன்.
: நன்றி விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக