செவ்வாய், 28 ஜூன், 2016



பணக்காரன் சாப்பிடற பொருள்:
ஒருநாள் காமராஜர் அறையில் இருந்த போது, மதுரைக்காரர் ஒருவர் அவரை பார்க்க வந்தார். வந்தவர் ஒரு தாம்பாள தட்டு நிறைய ஆப்பிள் பழத்தையும், அதன் மேல் வெற்றிலை பாக்கும் ஒரு கல்யாண பத்திரிகையையும் வைத்து நீட்டினார்.
பத்திரிகையை எடுத்துக்கொண்ட காமராஜர் "ஏய்யா இவ்வளவு ஆப்பிள் வாங்கி வந்தே... இதெல்லாம் பணக்காரன் சாப்பிடற பொருள்யா... ஒரு ஆப்பிளுக்கு நாலு எலுமிச்சம் பழம்ன்னாலும் இதுக்கு ஐம்பது எலுமிச்சை பழமாவது வருமேய்யா! எலுமிச்சை பழம்ன்னா ஜுஸ் புழிஞ்சி நானும் சாப்பிடலாம், வர்றவங்களுக்கும் கொடுக்கலாமேய்யா...
பணத்தை செலவு செய்யறது பெரிசில்ல... அதை முறையா செய்யணும்யா'' என்றார். ஒரு ஆப்பிளை மட்டும் எடுத்துக்கொண்டு, "இதே ஆப்பிளை வேறு யாராவது வி.ஐ.பியைப் பார்ககப் போனா யூஸ் பண்ணிக்கோ'' என்றார்.
தாயை அழைக்காதது ஏன்?:
தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி யாரும் தவறான காரியத்தில் ஈடுபடக் கூடாது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதில் காமராஜர் உறுதியாக இருந்தார். இதனாலேயே தான் முதல்வரான பிறகும் கூட அவருடைய தாயார் சிவகாமியை விருதுநகரிலேயே தங்க வைத்திருந்தார்.
ஒருமுறை அவரைப் பார்ப்பதற்காக, காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பிரமுகர் ஒருவர் விருநகருக்குச் சென்றிருந்தார். அவரிடம் சிவகாமி அம்மையார் மிகவும் வருத்தப்பட்டு, `என்னை எதுக்காக இங்கேயே விட்டு வச்சிருக்கான்னே தெரியல, என்னையும் மெட்ராசுக்கு அழைச்சுக்கிட்டா நான் ஒரு மூலையில் ஒண்டிக்கப் போறேன்' என்று கூறியிருந்தார்.
இந்த விஷயத்தை, சென்னைக்கு வந்த பிறகு காமராஜரிடம் கூறினார் அந்தப் பிரமுகர். அதற்கு அவர் நிதானமாகப் பதில் சொன்னார். `அடப்போப்பா. எனக்குச் தெரியாதா, அம்மாவைக் கொண்டு வந்து வச்சிருக்கணுமா வேணாமான்னு. அப்படியே கூட்டிட்டு வந்தா தனியாவா வருவாங்க. அவங்ககூட நாலுபேரு வருவான்.
அப்புறமா அம்மாவைப் பார்க்க, ஆத்தாவைப் பார்க்கன்னு பத்துபேரு வருவான். இங்கேயே டேரா போடுவான். இங்க இருக்கற டெலிபோனை யூஸ் பண்ணுவான். முதலமைச்சர் வீட்டுல இருந்து பேசறேன்னு சொல்லி அதிகாரிகளை மிரட்டுவான். எதுக்கு வம்புன்னுதான் அவங்களை விருதுநகர்லயே விட்டு வச்சிருக்கேன்' என்றார்.
டாக்டர் பட்டம் வேண்டாம்:
காமராஜருக்கு ஒரு பல்கலைக்கழகம் தனது பேரவையை கூட்டி கல்வித்துறையில் சிறந்த சாதனை புரிந்தமைக்காக டாக்டர் பட்டம் தரத் தீர்மானம் போட்டு அவரை தேடி வந்தனர். அவர்களிடம் பெருந்தலைவர் டாக்டர் பட்டமா? எனக்கா? நான் என்ன பெரிய சாதனை செஞ்சுட்டேன்னு இந்த முடிவெடுத்தீங்க? இதெல்லாம் வேண்டாம்.
நாட்டிலே எத்தனையோ விஞ்ஞானிகள், மேதாவிகள் இருக்கிறார்கள். அவங்களை கண்டு பிடிச்சு இந்த பட்டத்தை கொடுங்க, எனக்கு வேண்டாம். நான் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். போய் வாங்க என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக