புதன், 28 ஜனவரி, 2015

In Dhinamalar News paper : 'ஆவணங்களை அழித்தாலும் சாட்சியம் இருக்கிறது' என்கிறார் மதிவாணன்


மாற்றம் செய்த நாள்
25ஜன2015 00:49பதிவு செய்த நாள்
ஜன 24,2015 22:20
''அதிகாரத்தைப் பயன்படுத்தி, தொலைத்தொடர்புத் துறையில் மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்ட, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிக்கு, உடந்தையாக இருந்து செயல்பட்டது, துறை அதிகாரிகள் தான்; அவர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,'' என, தேசிய தொலைத்தொடர்புத் துறை ஊழியர் சம்மேளனத்தின் மாநிலச் செயலர் சி.கே.மதிவாணன் கூறினார்.
இது தொடர்பாக, அவர் கூறியதாவது: மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது, அமைச்சர் என்ற முறையில், சென்னை, போட் கிளப்பில் உள்ள தயாநிதி வீட்டுக்கு, தொலைபேசி இணைப்பு வழங்கப்பட்டது. அந்த இணைப்பில் தான், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அதை, தன் சகோதரர் நிறுவனமான சன் 'டிவி' நிறுவனத்துக்கு பயன்படுத்தி, 440 கோடி ரூபாய் அளவுக்கு வருமான இழப்பை ஏற்படுத்தி விட்டார். தன்னிச்சையாக இந்த முறைகேட்டை தயாநிதி நிகழ்த்தவில்லை. தொலைத்தொடர்புத் துறையின் அதிகாரிகள் பலர் இதற்கு உடந்தையாக இருந்து உள்ளனர். சென்னையில் தலைமை பொது மேலாளராக இருந்த வேலுசாமி என்பவர் தான், தயாநிதியின் எண்ணங்களுக்கும், செயல்பாடுகளுக்கும் முழு அளவில் ஒத்துழைத்தவர். அவர் தி.மு.க.,காரராகவே செயல்பட்டார். அப்போது அவர், தொலைத்தொடர்புத் துறையில், கேரளாவில் பணியாற்றிக் கொண்டிருந்தார். தயாநிதி, வீட்டு தொலைபேசி இணைப்பில் முறைகேடு செய்யும் திட்டம் தீட்டிய போது, சென்னை யில் தலைமை பொது மேலாளராக ராகவன் என்பவர் இருந்தார். தன் எண்ணங்களுக்கு அவர் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க மாட்டார் என தயாநிதி கணக்குப் போட்டு, அவருக்கு கீழ் நிலையில், கேரளா வில் பணியாற்றிக் கொண்டிருந்த வேலுசாமியை, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி சென்னைக்கு கொண்டு வந்தார். பின், அவரை தலைமை பொது மேலாளராக்கினார். அப்போது, ராகவன் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், அவரையும், தலைமை பொது மேலாளராகவே, சென்னையில் சம்பந்தமில்லாத ஒரு பிரிவுக்கு மாற்றி, தொடர அனுமதித்தார்.
அதன் பின், சென்னை, தொலைத்தொடர்புத் துறையில், தயாநிதி வைத்தது தான் சட்டம் என்று சொல்லும் அளவுக்கு, ஊழியர்கள் பல நிலைகளிலும் வற்புறுத்தப்பட்டனர். வேலுசாமியின் முழு ஆதரவோடு தான், தயாநிதி வீட்டுக்கு வழங்கப்பட்ட தொலைபேசி இணைப்பில், ஐ.எஸ்.டி.என்., என்ற நவீன தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு, சன் 'டிவி' நிறுவனத்திற்கு, 'ஆப்டிக்கல் பைபர் கேபிள்' மூலம் இணைப்பு கொடுக்கப்பட்டது. வேலுசாமியின் உத்தரவின்படி, அப்போது பொது மேலாளராக இருந்த செல்வம், துணைப் பொது மேலாளராக இருந்த மீனலோஷினி ஆகியோர், மொத்த தவறுக்கும் உடந்தையாக இருந்து செயல்பட்டனர். ஒரு கட்டத்தில், 'இந்த தவறான இணைப்பால், தொலைத்தொடர்புத் துறைக்கு பல கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது' என, ஊழியர் சம்மேளனம் சார்பில் நான் குரல் எழுப்பியதும், பிரச்னை பூதாகாரமாக வெளியே வந்தது. ஆனாலும், இந்த பிரச்னையின் ஆதாரங்களாக இருக்கும் ஆவணங்களை, தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் அழித்து விட்டனர். பொது மேலாளராக இருந்து செயல்பட்ட செல்வம், ஓய்வு பெற்று சென்ற பின், ஒரு நாள் தொலைத்தொடர்புத் துறை அலுவலகத்துக்கு வந்து, நடந்த முறைகேட்டைக் காட்டிக் கொடுக்கும் ஆவணங்களைத் தேடித் தேடி அழித்திருக்கிறார். இந்தத் தகவல்கள் கிடைத்ததும், அது தொடர்பாகவும் நான், தொலைத்தொடர்புத் துறை, தலைமையகத்துக்கு புகார் செய்தேன். பின்னாளில், சி.பி.ஐ., அதிகாரிகள், இந்த பிரச்னை தொடர்பாக, என்னை அழைத்து விசாரித்த போது, இது குறித்து கூறினேன்; விளக்கமான புகார் கொடுத்தேன்; வாக்குமூலம் பதிவு செய்தேன். இந்த வழக்கில், நானும் ஒரு முக்கிய சாட்சி.
இந்த பிரச்னையில், துவக்கத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் ஆழமாகச் செல்லவில்லை. அதனால், பிரச்னை யில் இருந்து தப்பி விடலாம் என, தயாநிதி நினைத்திருந்தார். ஆனால், உச்ச நீதிமன்றம் இது குறித்து தீவிரமாக விசாரிக்க உத்தரவிட்ட பின் தான், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்தனர். ஆவணங்கள் அழிக்கப்பட்டாலும், நூற்றுக் கணக்கில் சாட்சிகள் உள்ளன. எல்லாருமே, நடந்ததை சாட்சியமாக கோர்ட்டில் சொல்ல, தயாராக இருக்கின்றனர். குறிப்பாக தொலைத்தொடர்புத் துறையில் அதிகாரிகளாக இருந்து, மொத்த முறைகேட்டையும் நன்கு அறிந்து ஓய்வு பெற்ற செல்வம் மற்றும் மீனலோஷினியை, சி.பி.ஐ., அதிகாரிகள், அரசு தரப்பு சாட்சிகள் பட்டியலில் இணைத்து இருக்கின்றனர். தலைமை பொது மேலாளர் வேலுசாமியை குற்றம் சாட்டப்பட்டவர் பட்டியலில் சேர்த்துள்ளனர். இந்த வழக்கின் அடுத்தடுத்த கட்டங்களில், தயாநிதியும், வேலுசாமியும் கைதாக வாய்ப்பிருக்கிறது. சாட்சிகள் வலுவாக இருப்ப தால், 440 கோடி ரூபாய் வருமான இழப்பை, தொலைத்தொடர்புத் துறைக்கு ஏற்படுத்தினார் தயாநிதி என்பது, சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு விடும்.
3 பேர் கைது ஏன்?

இந்த விவகாரத்தில், தயாநிதி யின் தனி செயலர் கவுதமன், சன் 'டிவி'யின் தொழில்நுட்ப இயக்குனர் கண்ணன், எலக்ட்ரீஷியன் ரவி ஆகியோரை ஏன் கைது செய்தனர் என, பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
தன் வீட்டுக்கு தொலைபேசி இணைப்பு பெற்ற தயாநிதி, நவீன தொழில்நுட்ப உதவியுடன், கேபிள் மூலமாகவே அதை சன் 'டிவி' அலுவலகத்தோடு இணைத்தார். அதற்கு முழுக்க முழுக்க உதவியவர்கள் அந்த மூவரும் தான். இணைப்பில் மட்டும் அவர்கள் உதவிடவில்லை. பிரச்னை ஏற்பட்டதும், தன் வீட்டிற்கும், சன் 'டிவி'க்கும் இருந்த கேபிள் இணைப்பை இரண்டு முனைகளிலும் துண்டித்தனர். அந்த துண்டிப்பை செய்ததும், அந்த மூவரும் தான். இதற்கு, தொலைத்தொடர்புத் துறை ஊழியர்களும் உடந்தையாக இருந்திருக்கின்றனர். அதனால் தான், வழக்கில் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு, அவர்களை சி.பி.ஐ., கைது செய்திருக்கிறது. சி.பி.ஐ.,யின் பல கட்ட விசாரணையில் அவர்கள் மூவரும், அரசுத் தரப்புக்கு ஆதரவாக, நிறைய தகவல்களை சொல்லி விட்டனர். அதனால், அவர்கள் உயிருக்கு கூட அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தான், அவர்களை கைது செய்து, சி.பி.ஐ., பத்திரப்படுத்தி இருப்பதாக அறிகிறேன்.
மண்ணுக்குள் இருக்கும் கேபிள்:

ஐ.எஸ்.டி.என்., தொழில்நுட்பம் மூலம், போட் கிளப்பில் உள்ள தன் வீட்டில் இருந்து, 'ஆப்டிக்கல் பைபர் கேபிள்' மூலம் சென்னை, தேனாம்பேட்டை, அண்ணா அறிவாலயத்தில் அப்போது இயங்கிய சன் 'டிவி' அலுவலகத்துக்கும் இணைப்பு கொடுத்து விட்டு, பிரச்னை என்றதும், அந்த இணைப்பை துண்டித்து விட்டனர். இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டாலும், இன்று வரையில், அந்த கேபிள், அப்படியே மண்ணுக்குள் தான் புதைந்து கிடக்கிறது. அதை அவர்களால் அப்புறப்படுத்த முடியவில்லை. முன்பு, மண்ணுக்குள் புதைந்துள்ள தொலைபேசி கேபிளில் பழுது என்றால், கேபிள் பதிக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு மேலே, விசேஷமாக உருவாக்கப்பட்ட கருவி ஒன்றை, உருட்டிச் செல்வர். பழுது இருக்கும் இடத்தை, கருவி காட்டிக் கொடுத்து விடும். அதுபோல், இப்போது நவீனமாக புதிய கருவிகள் வந்து விட்டன. பூமிக்கு அடியில் புதைந்து கிடக்கும் விஷயங்களை, 'சாட்டிலைட் மேப்பிங்' மூலம், எளிதாகக் கண்டுபிடிக்கின்றனர். அந்த வகையிலும் கூட, போட் கிளப் - அண்ணா அறிவாலயம் இடையில், கேபிள் புதைந்து இருப்பதை கண்டறிந்து விடலாம். அப்படி கண்டறிந்து விட்டால், நடந்த தவறை, சி.பி.ஐ., அதிகாரிகள், எளிதில் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும். புதைந்து கிடப்பது கேபிள் தானே என, யாரும் நினைக்க வேண்டியதில்லை; உண்மையும் தான். ஆனால், இப்படி முறைகேட்டுக்கு ஆதாரங்கள் இருக்க, தவறே நடக்காதது போல தயாநிதி பேசி வருகிறார். அவர், தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த இரண்டரை ஆண்டுகளில் தான், மூன்று பெரிய பிரச்னைகளில் சிக்கினார். அவர் தன் சுயநலத்துக்காக, தன் பதவியை பயன்படுத்தினார்; அதனாலேயே சிக்கல் ஏற்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக