புதன், 5 நவம்பர், 2014

தோழர். ஆர்.நல்லகண்ணு அவர்களின் 
89 வது பிறந்த நாள்
இன்று 89 வது பிறந்த நாள் காணும் தலைவர் ஆர். நல்ல கண்ணு அவர்கள், வேறுயாருமே சந்தித்திராத பல்வேறு அடகுமுறைகளை சந்தித்த தலைவர். கம்யூனிஸ்டு கட்சி தடைசெய்யப்பட்டக் காலத்தில், ஓராண்டிற்கு மேல் தலைமறைவு வாழ்க்கை. அதன் பின்னர் சிறை வாழ்க்கை.
இவர் கைது செய்யப்பட்ட விதம், நம்மை பெரிதும் அதிர்ச்சியுற வைக்கிறது. 1948 ஆம் ஆண்டில் நாங்குநேரி தாலுகா புலியூர் குறிச்சி என்னும் ஊரில், தலித் மக்களின் குடியிருப்பில், நள்ளிரவில் ஒன்றில், பொதுமக்களுக்குப் பேரச்சத்தை உருவாக்குமாறு காவல்துறையினரால், இவர் கைது செய்யப்பட்டார்.
அடர் தலைமுடியும், அடர்த்தியான மீசையையும் கொண்டர். கம்பீரமும், உயரமும் கொண்ட உடல் வாகு. இண்டர்மிடியட் படித்து முடித்திருந்தார். சகித்துக் கொள்ள இயலாத தாக்குதல் இவர் மீது ஏவப்பட்டது. கொடிய வெறி கொண்ட காவல்துறை இன்பெக்டரால், இவரது மீசை சிகரட் நெருப்பின் மூலம், கொஞ்சம் கொஞ்சமாக பொசுக்கிக் கருக்கப்ட்டது. மிகவும் கொடுமையான சித்ரவதை.
நெல்லை சதிவழக்கு வழக்கில், இவருக்கு ஆயுள் தண்டûனையும், கைது செய்யும் போது வெடிகுண்டுகளை வைத்திருந்தார் என்பதற்காக மேலும் ஆறு ஆண்டுகள் தண்டணையும் இவருக்கு வழங்கப்பட்டது.
சிறை வாழ்க்கையில் ஒரு கைதி செய்ய வேண்டிய கட்டாயப் பணியாக, நூலகத்தில் இவருக்கு வேலை கொடுக்கப்பட்டு, அதனை விருப்பபூர்வமாக செய்திருக்கிறார்.தியாகி பாலு, தூக்கிலிடப்பட்ட போது, இவரும் அதே மதுரை சிறையில் கைதியாக இருந்திருக்கிறார்.
பாலுவின் சிறைக் கொட்டடிக்கு அருகில் தான், இவரது சிறைக் கொட்டடியும் அமைந்திருந்தது என்கிறார். அவர் தூக்கிலிடப்பட்ட முதல் இரவு முழுவதும் எங்களால் தூங்க முடியவில்லை. அதிகாலை தூக்கிலிட்ட போது, புரட்சி ஓங்குக என்ற முழக்கம் எங்களுக்கு கேட்டது. நாங்கள் அந்த முழக்கத்தை ஆமோதித்து வேதனைக் கண்ணீரோடு, ஆதரவு முழக்கம் எழுப்பினோம் என்று இப்பொழுதும் உணர்ச்சி பொங்க ஆர்.என்.கே அவர்கள் கூறுகிறார்கள்.
தண்டனைக் குறைக்கப்பட்டு இவர் 1956 ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக