வியாழன், 17 ஜூலை, 2014

டும்டும்டும்டும்.... இந்தியா ஒரு தரம்... இந்தியா ரெண்டு தரம்... இந்தியா மூணு தரம்..!



பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீடு...  ரயில்வே துறையில் அந்நிய முதலீடு..

. காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு...' என்று புதிய பி.ஜே.பி அரசு 
ஒரேயடியாக அந்நிய மோகத்தில் திளைப்பதைப் பார்க்கும்போது... 

ஒரு படத்தில் கவுண்டமணி அடிக்கும் கூத்துதான் நினைவுக்கு வருகிறது.

வாசலில் நிற்கும் பிச்சைக்காரரைப் பார்த்து, 'சோறு இல்லை போ' என்று 
சொல்வார் மனைவி. உடனே சீறிக்கொண்டு கிளம்பும் கணவன் 
கவுண்டமணி, 'அதெப்படி சோறு இல்லைனு நீ சொல்லலாம். இந்த 
வீட்டுல நான் பெரியவனா... நீ பெரியவனா' என்கிற ரேஞ்சில் 
குதியாட்டம் போட்டபடியே அந்தப் பிச்சைக்காரரை அழைத்து, 
'இப்ப நான் சொல்றேன்... உனக்கு சோறில்லை போடா' என்று 
சொல்வார்.காரித்துப்பியபடியே நகர்வார் பிச்சைக்காரர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோனியா காந்தி பிரதமர் ஆகும் 
வாய்ப்பு வந்தபோது, ''அவர் அந்நியர்... இந்தியாவை ஆளத் 
தகுதியில்லை. நாட்டையே அந்நியர்களுக்கு விற்றுவிடுவார்'' 
என்று கடும் எதிர்ப்புக் காட்டியது பி.ஜே.பி. இதையடுத்துதான், 
அந்தப் பதவியில் வந்து அழகாக அமர்ந்தார் திருவாளர் மன்மோகன் 
சிங். 

கண்டகண்ட வழிகளிலும் அந்நியர்களுக்கு இந்தியாவையே பட்டா 
போடப் பார்த்தார். கூட்டணி ஆட்சி எனும் குருமா ஆட்சி நடந்தபோதும், 
தன்னால் முடிந்தவரை இதைச் சாதிக்கவும் செய்தார். கண்ட 
கண்ட வழிகளில் எல்லாம் அந்நியர்களுக்கு இங்கே பந்தி
 விரித்தார். இந்தியர்களை பங்குதாரர்களாகக் கொண்ட அந்நிய 
நிறுவனங்களுக்கு அனுமதி என்றெல்லாம் கொல்லைப்புற
 வாயிலைத் திறந்துவிட்டார்.

அப்போதெல்லாம் எதிர்ப்புக் காட்டி வந்த பி.ஜே.பி, இப்போது 
அதைவிட அநியாயத்துக்கும் அந்நிய மோகத்தில் மயங்கிக் 
கிடக்கிறது. 'நீயென்ன அந்நியனுக்கு நாட்டை விற்பது. 
இதோ நாங்கள் விற்கிறோம்' என்றபடி வேகமெடுத்துக் 
கொண்டிருக்கிறது மோடியின் ஆட்சி. போகிற போக்கில் 
நாடாளுமன்றத்தில் கூட அந்நிய முதலீடு, அதாவது 
அந்நியர்களுக்கு 50 சதவிகித இடங்களை ஒதுக்கிக் கொடுத்தாலும்
 கொடுத்துவிடுவார்கள் போலிருக்கிறது.

கேட்டால், 'கையில் நிதியில்லை... வெள்ளைக்காரனிடம் 
கையேந்துவதைத் தவிர வேறு வழியில்லை' என்று 
சப்பைக் கட்டுகிறார்கள் ஏற்கெனவே மன்மோகன் சிங்குக்கு 
ஜால்ரா அடித்த அதே 'பொருளாதார புலிகள்'.கையில் காசில்லை 
என்கிறார்கள். 

ஆனால், நதி நீர் இணைப்புக்கு 100 கோடியை ஒதுக்கிவிட்டு, 
சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு 200 கோடியை 
ஒதுக்குகிறார்கள்... 'கிடக்கறது கிடக்கட்டும் கிழவனை 
தூக்கி மனையில வை' என்கிற கதையாக! 

காசுக்காக எதற்காக வெளிநாட்டுக்காரர்களிடம் கையேந்த வேண்டும். 
இங்கே கோடி கோடியாக கொள்ளையடித்து வைத்திருப்பவர்களின் 
மீது கை வைக்க வேண்டியதுதானே! அதிகாரிகள், அரசியல்வாதிகள் 
என்று அரசாங்க பணத்தை ஊதாரித்தனமாக செலவு 
செய்வதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டியதுதானே! விவசாயிகளுக்கு 
கூட்டம் போடுகிறேன் என்று சொல்லிக் கொண்டு, கோட்சூட் போட்ட 
கனவான்கள் மட்டுமே பங்கேற்கும் கூட்டங்களை நட்சத்திர ஓட்டல்களில் 
லட்சங்களைக் கொட்டி நடத்துவதை நிறுத்த வேண்டியதுதானே! 
ஸ்விஸ் வங்கியில் ஒளித்து வைத்திருக்கும் பணத்தையெல்லாம் 
கொண்டு வருவோம் என்றீர்களே... அதையெல்லாம் கொண்டு 
வரவேண்டியதுதானே. இதையெல்லாம் செய்யாமல், பணம் இல்லை 
என்று பஞ்சப்பாட்டுப் பாடுவது எதற்காக? பணமில்லை என்று 
சொல்வதில் உண்மையே இல்லை. மன்மோகன் சிங் 
அணிந்திருந்த அதே... அமெரிக்க முகமூடி இடம் 
மாறியிருக்கிறது என்பதுதான் உண்மை
91ஆம் ஆண்டு நிதியமைச்சராக வந்தமர்ந்ததிலிருந்து, 
2014ஆம் ஆண்டு கூட்டணி அமைச்சரவையின் பிரதமராக நீடித்தது 
வரை அமெரிக்கா மற்றும் உலக நிதிநிறுவனத்தின் பல்வேறு 
ஆசைகளையும் இந்தியாவில் நிறைவேற்றத்தான் செய்தார் 
திருவாளர் மன்மோகன் சிங். இதன் கோர விளைவுதான் நாடு 
முழுக்க அந்நிய நிறுவனங்கள் பலவும் தாறுமாறாக 
முளைவிட்டது. குறிப்பாக பெப்ஸி, கோக் போன்ற 
நிறுவனங்கள் இந்தியாவின் நிலத்தடி நீராதாரத்தை உறிஞ்சும் 
வேலைகளை கச்சிதமாக செய்து கொண்டிருக்கின்றன.
'தொழிற்சாலைகள் மட்டுமே போதும்... விவசாயிகள் எல்லாம் 
நிலங்களை விட்டு வெளியேறுங்கள்' என்று வெளிப்படையாகவே 
மன்மோகன் சிங்கும்... அவருடைய கைத்தடியாக இருந்த திட்டக்குழு 
துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவும் அறிவித்ததால்... 
எங்கே திரும்பினாலும் தொழிற்சாலைகள் முளைத்துக் கிடக்கின்றன. 
இதனால் புனித நதி என்று போற்றப்படும் கங்கை, காவிரி மட்டுமல்ல... 
கோணவாய்க்காலில்கூட கழிவு நீரே கலந்தோடுகிறது.
கிராமங்கள் எல்லாம் நகர்ப்புறங்களாகிவிட்டதால், இனி விவசாய 
நிலங்களுக்கு எங்கே போவது என்கிற இக்கட்டான நிலை 
ஏற்பட்டுள்ளது. 'வானளாவிய கட்டடங்கள்தான் வளர்ச்சி' 
என்கிற நினைப்பில் நாட்டின் பெரும்பாலான நகரங்கள் கான்கிரீட் 
காடுகளாகிவிட்டன.தாறுமாறான இந்தப் பொருளதார வளர்ச்சியின் 
காரணமாக... காடுகள் வேகமாக அழிக்கப்படுகின்றன. கடந்த 20 
ஆண்டுகளுக்கு முன்பு இல்லாத அளவில் காட்டுப்பகுதிகளில் 
'சுற்றுலா' என்கிற பெயரில் ஓய்வு விடுதிகள் பெருகிவிட்டன. இந்த 
நிலையிலும்கூட உண்மைகளை உணர விரும்பாமல்... திரும்பத் 
திரும்ப 'வளர்ச்சி' என்கிற ஒற்றை வார்த்தையை வைத்துக் கொண்டு, 
இந்தியாவையே விற்கப் பார்க்கிறார்கள்.ஒரு ரூபாய் சம்பளம் 
வாங்குபவனுக்கு... ஓராயிரம் ரூபாய் மீது ஆசை... ஓராயிரம் ரூபாய் 
சம்பளம் வாங்குகிறவனுக்கு ஒரு லட்சம் ரூபாய் மீது ஆசை. 
ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்குகிறவனுக்கு ஒரு கோடி மீது 
ஆசை... இந்த ஆசைக்கு எல்லை ஏது. 
இதேபோலத்தானே நீங்கள் சொல்லும் 'வளர்ச்சி'யும்.
இப்படியே போனால், மன்மோகன் சிங் கடந்த இருபது 
ஆண்டுகளில் சாதிக்க முடியாததை... இரண்டே ஆண்டில்
 நரேந்திர மோடி சாதித்தே விடுவார் என்றே தோன்றுகிறது.
அட, இந்தியாவை வெளிநாட்டுக்காரர்களிடம் 
மொத்தமாக விலை பேசுவதைத்தான் சொல்கிறேன்.
          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக