வியாழன், 27 மார்ச், 2014

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி; எதிர்ப்பு தெரிவித்த இந்தியா வாக்களிக்கவில்லை!

    ஜெனிவா: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் 23 உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் வெற்றிகரமாக நிறைவேறியது. 

ஜெனிவாவில் நடைபெற்ற  ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை கோரும் அமெரிக்கத் தீர்மானம் மீதான விவாதம், இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணியளவில் தொடங்கி நடைபெற்று வந்தது.
இலங்கை அரசைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க கோரி பல நாடுகளிடம் பேசியதை கண் கூடாக பார்க்க முடிந்தது. 
இந்தியா எதிர்ப்பு

இதனிடையே இலங்கை மீதான தீர்மானம் தொடர்பாக பல நாடுகள் ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்த நிலையிலும், இந்த தீர்மானம் தொடர்பாக இந்தியா எந்த நிலைபாட்டை எடுக்கும் என்பது இன்றுவரை சஸ்பென்ஸ் நீடித்தது. இந்நிலையில் இந்தியா தனது தரப்பில் வாதத்தை முன்வைத்து பேசிவிட்டு, அதே சமயம் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல்  புறக்கணித்தது.

இந்தியா தரப்பில் பேசிய பிரதிநிதி, இந்த தீர்மானத்தை எதிர்ப்பதாகவும், இத்தீர்மானம் நிறைவேறினால் இலங்கை மேற்கொண்டு வரும் பணிகள் பாதிக்கப்படும் என்றும் கூறினார். மேலும் 13வது சட்ட திருத்தத்தை இலங்கை அமல்படுத்த வேண்டும். அண்டை நாடு என்ற முறையில் இலங்கையில் வளர்ச்சி பணிகளை இந்தியா மேற்கொள்கிறது. வடக்கு மாகாண கவுன்சில் தேர்தல் நடத்தப்பட்டதை இந்தியா வரவேற்கிறது என்றும் தெரிவித்தார்.
இலங்கை பதில்
முன்னதாக அமெரிக்க தீர்மானம் குறித்து இலங்கை பிரதிநிதி பதிலளிக்கையில், ''அமெரிக்காவின் தீர்மானம் எங்களின் இறையாண்மைக்கு எதிராக உள்ளது. சர்வதேச விதிகளுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்றார்.
மேலும், அமெரிக்க தீர்மானத்தை உறுப்பு நாடுகளும் எதிர்க்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
 ஆதரவு நாடுகள்
தே சமயம்  இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் மற்றும் மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக பேசின. அதே வேளை சீனா,பாகிஸ்தான்,கியூபா இன்னும் பிற இலங்கை ஆதரவு நாடுகள் தீர்மானத்தின் பத்தாவது குறிப்பை அகற்ற சொல்லி கோரின.

பத்தாவது குறிப்பில்," இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை, இலங்கையின் மனித உரிமை நிலை தொடர்பாக கண்காணிக்க வேண்டும்,இதுதொடர்பாக ஐ.நா.சபைக்கு 28 வது மனித உரிமைக் கூட்டத்தில் அறிக்கை அளிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றையே இலங்கை ஆதரவு நாடுகள் அகற்றச் சொல்லி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
வாக்கெடுப்பில் வெற்றி
இந்நிலையில் விவாதத்தின் முடிவில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 23 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது. அதே சமயம் தீர்மானத்தை எதிர்த்து 12 நாடுகள் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் ஒட்டெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன. 

ஜெனீவாவிலிருந்து மகா.தமிழ்ப்பிரபாகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக